கரோனா வைரஸால் தேனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும் நோய் தொற்று குறைந்தபாடில்லை.
இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவின் நேர்முக தனி உதவியாளர், ஒருவருக்கு இன்று கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த அவர், கடந்த சில தினங்களாக காய்ச்சல், உடல் சோர்வு உள்ளிட்ட தொந்தரவுகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று முன் தினம் (ஜூலை15) தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனையின் முடிவில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நேர்முக உதவியாளர், உடல் நலக்குறைவால் கடந்த சில நாள்களாகவே விடுமுறையில் இருந்து வந்துள்ளார். இதனால் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் பெரியகுளம் பகுதியை சேர்ந்த வங்கி ஊழியர், சிறப்பு காவல் ஆய்வாளர் மற்றும் 2 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுடன் இணைந்து பணியாற்றி வந்த சக ஊழியர்களும் பீதியில் உறைந்துள்ளனர்.