தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ளது ராமசாமிநாயக்கன்பட்டி. இப்பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் விமலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதேபோல் அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவருபவர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவருக்கும் திருமணம் ஆகி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அரசு தொடக்கப்பள்ளிக்கு தனியார் பள்ளி ஆசிரியர் ரமேஷ் அடிக்கடி சென்று வந்தபோது ஆசிரியை விமலாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதால் இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றுவதும், மாணவர்கள் இல்லாதபோது வகுப்பறையில் நெருக்கமாகவும் இருந்துள்ளனர். இதனிடையே வகுப்பறையில் இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்களை வீடியோவாக மாற்றம் செய்து, ஆசிரியர் ரமேஷ் தவறுதலாக வாட்ஸ்ஆப் குரூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த வீடியோவை சில தினங்களுக்கு முன்னர் தவறுதலாக ஆசிரியர்கள் குழுவில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையிலான உறவு வெளி உலகிற்கு தெரியவந்தது.
இதனை அறிந்த தனியார் பள்ளி நிர்வாகம், ஆசிரியர் ரமேஷை பணியிடை நீக்கம் செய்தது. அதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியை விமலாவும் நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, தனியார் பள்ளி ஆசிரியர் என்பதால் ரமேஷ் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்றும், விமலா அரசுப் பள்ளி ஆசிரியை என்பதால், விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, உண்மை தன்மை அறிந்த பின்னரே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் எனத் தெரிவித்தனர். மேலும் தற்போது வெளியான வீடியோவில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் ஒரு வருடத்திற்கு முன்னரே எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.