தேனி: தமிழக - கேரள எல்லையான தேனி மாவட்டம் குமுளி வழியாக ரேஷன் அரிசி, லாட்டரி சீட்டுகள் போன்றவை கடத்தப்படுவதாக குமுளி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் குமுளி காவல் துறையினர் நேற்று இரவு (செப்.15) குமுளி சோதனைச் சாவடி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கார், இருசக்கர வாகனம், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவை தொடர்ச்சியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், கேரள மாநிலம் பகுதியில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி முதியவர் ஒருவர் நடந்து வந்துள்ளார். அவர், காவல் துறையினர் சோதனை நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் பதுங்கி, பதுங்கி சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்டுள்ளார்.
அவரைக் கண்டு சந்தேகமடைந்த குமுளி காவல் துறையினர், முதியவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்து பார்த்தபோது, அவரது வயிற்றுப் பகுதியில் ஏதோ கட்டி இருப்பது போன்று தெரியவந்துள்ளது.
தொடர்ந்து அவரது சட்டையை கழற்றி காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது அவர், தங்க பிஸ்கட் (Gold Biscuit) ஒன்றினை கயிற்றைக் கொண்டு வயிற்றில் கட்டி வைத்திருந்து கண்டறியப்பட்டது. இதனையடுத்து அந்த தங்க பிஸ்கட்டினை பறிமுதல் செய்த காவல் துறையினர், அதை எடை போட்டு பார்த்தபோது 503 கிராம் இருந்துள்ளது. மேலும் அதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மதுரை மாவட்டம் கோச்சடை மகா கணபதி நகரைச் சேர்ந்த கணேசன் (66) என்பதும், கேரளா மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஒரு நபர் தங்க பிஸ்கட்டை மதுரையில் ஒருவரிடம் கொடுக்கச் சொன்னதாகவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து உடனடியாக தேனி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகளிடம் தங்க பிஸ்கட்டை ஒப்படைத்த குமுளி காவல் துறையினர், கணேசனையும் ஒப்படைத்தனர். அதையடுத்து, தங்க பிஸ்கட் எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்பட்டது? அது யாருடையது? என்பது குறித்தும், அதற்கான உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு!