தேனி: அம்மாபட்டியைச் சேர்ந்தவர், துரைப்பாண்டியன். கடந்த மாதம் 17ஆம் தேதி இவரது வீட்டில் சிறுத்தையின் தோல், மொட்டை மாடியில் காய வைக்கபட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் துரைப்பாண்டியன் வீட்டுக்குச்சென்று பார்த்தபோது துரைப்பாண்டியன் வீட்டை பூட்டி தலைமறைவாகி விட்டார்.
பின்னர் வீட்டின் மேல் மாடிக்குச்சென்று பார்த்தபோது அங்கே சிறுத்தையின் தோல் மஞ்சள் பூசி மொட்டை மாடியில் காய வைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர்களுக்குத் தகவல் அளித்தனர். முதல்கட்ட விசாரணைக்கு பின்னர் சிறுத்தையின் தோலை ஒரு வாரத்திற்கும் மேலாக மொட்டை மாடியில் காய வைத்து இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த சிறுத்தை எங்கே எப்போது யாரால் வேட்டையாடப்பட்டது, எதற்காக சிறுத்தையை வேட்டையாடி மொட்டை மாடியில் காய வைத்து இருக்கிறார்கள் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த துரைப்பாண்டியனை வனத்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் துரைப்பாண்டியனுக்கு உதவியாக இருந்த அவரது மனைவி செல்லம்மாள் தலைமறைவாக உள்ளர். துரைப்பாண்டியனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மலையடிவாரத்தில் இறந்துகிடந்த சிறுத்தையின் தோலை உரித்து விட்டு அதன் உடல் பாகங்களை தேனி அருகில் உள்ள சுடுகாட்டில் வைத்து எரித்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து துரைப்பாண்டியனை வனத்துறையினர் தேனி லட்சுமிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதே போல் பல வன விலங்குகளை வேட்டையாடி இருப்பாரா என்பது குறித்தும், இவருக்கு மேலும் பலர் உடந்தையாக இருந்துள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் லாரி மோதியதில் யானை உயிரிழப்பு