தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள கருப்பத்தேவன்பட்டியைச் சேர்ந்த மாயாண்டி என்பவரது மகன் போஸ் (40). இவருடைய சித்தப்பா மகன் குமார் (25). அண்ணன் - தம்பி இருவரும் கருப்பத்தேவன்பட்டியில் வசித்து வந்தனர். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக இருவக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் போஸ், குமார் இருவரும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் சொத்து தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் சராமாரியாக தாக்கிக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த குமார் அங்கிருந்த சுத்தியலை எடுத்து அண்ணன் போஸின் தலையில் கடுமையாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த போஸ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மதுரைக்குச் செல்லும் வழியிலேயே போஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக போஸின் மனைவி ஜான்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்க: இரும்புக் கம்பியால் பெண் அடித்துக் கொலை!