தேனி: கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துவருகின்றது. இதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டத்திலும் அனைத்து இடங்களில் பரவலாக கனமழை பெய்துவருகின்றது.
இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள, கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இதுபோலவே, ஹைவேவிஸ் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடமலைக்குண்டு அருகே உள்ள சின்னசுருளி என்றழைக்கப்படும் மேகமலை அருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
இது தவிர, கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழ்நாட்டுப் பகுதிகளான டாப் ஸ்டேசன், சென்ட்ரல் ஸ்டேசன் உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கொட்டக்குடி ஆற்றில், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போடி அருகே முந்தல் சாலையில் உள்ள அணைப்பிள்ளையார் கோவில் தடுப்பணையில் தண்ணீர் அருவிபோல கொட்டுகின்றது.
இதன் காரணமாக, அருவி மற்றும் நீர்நிலைப் பகுதிகளுக்கு பொதுமக்கள், இளைஞர்கள் யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: மூல வைகையில் வெள்ளப்பெருக்கு: உயரும் வைகை அணையின் நீர்மட்டம்