தேனி: தேனியில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தேனி மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் 145ஆம் ஆண்டு சமூக நீதி நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அப்போது தேனி மாவட்ட பாஜக நிர்வாகிகள் சனாதனத்திற்கு எதிராக செயல்படும் திராவிடர் கழகத்தின் விழிப்புணர்வு பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் தேனி நேரு சிலை பகுதிக்கு வந்தனர்.
பின்னர் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், பாஜகவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், பாஜகவினர் போலீசாருக்கு எதிராகவும், திராவிடர் கழகத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்ய முற்பட்டபோது பாஜகவினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
அப்போது தேனி துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடித்து சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று அவர்களை வாகனத்தில் ஏற்றினார். இதனால் பாஜகவினர் டிஎஸ்பி பார்த்திபனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மேலும், பாஜகவினரின் போராட்டத்தை அடக்குவதற்கு சக காவலரையும் அடித்து அவர் நடந்து கொண்ட விதம் சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மேலும், பாஜகவின் போராட்டத்தை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்களின் மீதும் வரம்பு மீறி ஒருமையில் பேசி அவர் நடந்து கொண்ட விதம் செய்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், இவரது நடவடிக்கைக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டாங்கரே நடவடிக்கை எடுப்பாரா என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது. இவ்வாறு திராவிடர் கழகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் நடத்திய விதத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தேனி மாவட்ட பாஜகவினர் இதற்கு தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து தேனி மாவட்ட பாஜக சார்பில், “தேனி காவல் சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனின் அத்துமீறல் - நடவடிக்கை எடுக்குமா தமிழக காவல்துறை? இன்று (17.09.2023) தேனி நகரில் சனாதன எதிர்ப்பு பேரணியை எதிர்ப்பு தெரிவித்த தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர்கள், RSS பொறுப்பாளர்கள், இந்து முன்னணி, சக ஆதரவு கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களை அவமரியாதையாகவும், அசிங்கமாகத் திட்டி, சட்டையைப் பிடித்து அடித்து தர தரவென இழுத்து தரக்குறைவாக நடத்திய தேனி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் அத்துமீறி செயல்பட்டுள்ளார்.
மேற்படி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன்-ஐ உடனடியாக பணி நீக்கம் செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.