தேனி: போடிநாயக்கனூர் அருகே உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். முற்றிலும் விவசாயத்தை சார்ந்துள்ள இப்பகுதியில், தற்போது பூக்கள் விவசாயத்தில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் சுற்றுப்பகுதிகளில் மஞ்சள் செவ்வந்தி, வெள்ளை செவ்வந்தி, மஞ்சளும் வெள்ளையும் கலந்த ஒட்டுரக செவ்வந்திப் பூக்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.
மேலும், காண்பதற்கு கண்ணை கவரும் மஞ்சள் செண்டு பூக்களும் தற்போது அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது மஞ்சள் செவ்வந்தி கிலோ 80 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரையிலும், வெள்ளை செவ்வந்தி பூக்கள் கிலோ 100 ரூபாயில் இருந்து 120 வரையிலும், அதன் தரத்தைப் பொறுத்து வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
மஞ்சள் செண்டு பூ, கிலோ 30 ரூபாயில் இருந்து 40 வரை விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படுகிறது. இதனால், பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தாத விற்பனை சூழல் நிலவி வருவதால் விவசாயிகள் திருப்தி அடைந்துள்ளனர்.
மேலும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி மற்றும் பல்வேறு பண்டிகைகள் தொடர்ந்து வர இருப்பதால், இனி வரும் நாட்களில் பூக்கள் விலை கிலோ ரூ.200 முதல் 280 வரை விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மஞ்சள் செவ்வந்தி, வெள்ளை செவ்வந்தி, மற்றும் மஞ்சள் உடன் வெள்ளை கலந்த செவ்வந்திப் பூக்கள், செண்டுப் பூக்கள் விவசாயத்தில், விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: நீண்ட நாள் கனவு நனவானது.. விராட் கோலிக்காக 40 மணிநேர உழைப்பு.. சென்னை ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விராட்!