தேனி: லோயர்கேம்பில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை உள்ள 14,707 ஏக்கர் ஆயக்கட்டுப் பகுதி விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக இருப்பது முல்லைப் பெரியாறு அணை. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கிடைக்கும் நீர் மூலமாக இந்த 14,707 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகளிலும் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 1 ஆம் தேதி முதல் போகப் பாசனத்திற்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போகத்திற்கு வினாடிக்கு 200 கன அடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர்த் தேவைக்காக 100 கன அடி தண்ணீரையும் சேர்த்து 300 கன அடி தண்ணீரை 01.06.2023 முதல் 120 நாட்களுக்கு, தேவைக்கேற்ப நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடத் தமிழக அரசு உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய பொழுதிலும் பெரியாறு அணைக்கட்டு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடையாததால் மழைப்பொழிவு குறைவாகவே இருந்து வருகிறது.
இதையும் படிங்க: Video Leaked: கோர்ட் முன்பு மனைவியை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி.. தேனியில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!
வழக்கமாக ஜூன் மாத துவக்கத்திலேயே தென்மேற்கு பருவமழை பொழியும் நிலையில் இந்த ஆண்டு பருவ மழை தீவிரம் அடையாமல் உள்ளது. தென்மேற்கு பருவமழையால் மற்ற பகுதிகளில் மழை பெய்தாலும் பெரியாறு அணைக்கட்டு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக உள்ளதால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் விவசாய தேவைக்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் அணையிலிருந்து, சுமார் 250 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது. மேலும் அணைக்கு வரும் நீர்வரத்து இல்லாமல் காணப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாமல் உள்ளதாலும், அணையிலிருந்து திறந்து விடும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதாலும் நெல் சாகுபடி செய்யும் தேனி மாவட்ட விவசாயிகள் காலதாமதமாக நடவுப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகக் கூறி வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையாமல் உள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக நடவுப் பணிகளைத் தாமதமாக மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளதாக விவசாயிகள் கூறி உள்ளனர்.
இதையும் படிங்க: அனுமதியின்றி தண்ணீரை உறிஞ்சும் கேன் குடிநீர் ஆலைகள் - சென்னையில் அபாய ஒலி எழுப்பும் நிலத்தடி நீர்மட்டம்!