தேனி: சின்னமனூரில் ’வீரம்’ என்ற பெயரில் அஜித் ரசிகர் காளிதாஸ் என்பவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகரான இவர் நடிகர் அஜித் மேல் கொண்ட பற்றால் தனது உணவகத்திற்கு ‘வீரம்’ எனப் பெயர் சூட்டியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், ’துணிவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைக் கொண்டாடும் விதமாக, தனது உணவகத்தில் பழைய பத்து ரூபாய் நோட்டுக்குப் பிரியாணி வழங்கினார். அதேபோன்று அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி அன்று தனது உணவகத்தில், அனைவருக்கும் ஒரு ரூபாய்க்கு டீ வழங்கி அசத்தியுள்ளார்.
இதன் வரிசையில் தற்போது துணிவு படத்தின் ’சில்லா சில்லா’ பாடல் வெளியானதைத் தொடர்ந்து ’வீரம்’ உணவகத்தில் இரண்டாவது கிளையை இன்று துவக்கினார். மேலும் அதில் அஜித்தின் ஆறடி உயர உருவ சிலையைத் திறந்து வைத்தார். இது ரசிகர்களின் பார்வைக்காகவும், தான் அஜித் மேல் வைத்துள்ள பற்றை வெளிக்காட்டும் விதமாக அமைக்கப்பட்டதாக காளிதாஸ் தெரிவித்தார். தென் தமிழகத்தில் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு முதல்முறையாக உருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'எனது பயோபிக்கில் சிவகார்த்திகேயன்' - கிரிக்கெட் வீரர் நடராஜன் தகவல்!