தேனி மக்களவைத் தேர்தலில் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார், அமமுக சார்பில் தங்கதமிழ்ச்செல்வன், காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் போட்டியிட்டனர். முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தேனி மக்களவைத் தொகுதி பார்க்கப்பட்டது. வாக்குப்பதிவின்போது பல பிரச்சனைகள் ஏற்படும் என எதிர்பார்த்தபோதும் எந்தவித பிரச்சனையும் இன்றி தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு குளறுபடிகள் ஏற்படலாம் என எதிர்க்கட்சிகள் சந்தேகமடைந்துள்ள சூழலில், திடீரென நேற்று மாலை 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. இதனை அறிந்த காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த புதிய இயந்திரங்களை வைத்து வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி செய்ய ஆளும் தரப்பு திட்டமிடுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. இதற்கு விளக்கம் அளித்த அலுவலர்கள், சில இடங்களில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டால், அதற்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை. அதற்காகவே இந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், வட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராடியது மட்டுமல்லாமல் அரசு அலுவலர்களிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் எதிர்க்கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் சீல் உடைக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியினர் சார்பாக ஒரு பிரதிநிதிகளை அழைத்துச் சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தை பரிசோதனை செய்தனர்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், 'கோவையில் இருந்து கொண்டுவரப்பட்ட 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில் தேனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி- ஆண்டிபட்டியில் பாலசமுத்திரம் ஆகிய வாக்குச்சாவடிகளிலும் இயந்திரக்கோளாறு காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே பரிந்துரை அனுப்பியுள்ளேன். ஆனால் இந்தத் தொகுதிகள் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுவதற்குதான் தற்போது மின்னணு இயந்திரங்கள் வந்துள்ளதா எனத் தெரியாது' என்றார்.