தேனி: தென் தமிழக மக்களின் ஜீவாதாரமாக விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக். தமிழக மக்களால் இவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் ஜனவரி 15ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில், இன்று ஜான் பென்னிகுவிக்-இன் 182வது பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் தேன் சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான் சிட்டு, வான் சிட்டு, இளம் சிட்டு, புள்ளிமான் சிட்டு என ஆறு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட ஜோடி மாட்டு வண்டிகளும், சாரதிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மேலும் இப்போட்டியானது சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை, தேனி சுருளி அருவி சாலையில் நடைபெற்றது. போட்டியில் கலந்து கொண்டு, சீறிப்பாய்ந்து எல்லை நோக்கிச் சென்று, முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி மற்றும் வீரர்களுக்கு ரொக்கப்பரிசு, கோப்பை, கேடயம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.
முதலில் கொடி வாங்கும் மாட்டு வண்டிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், இந்த இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் எம்எல்ஏ, திமுக கம்பம் ஒன்றியச் செயலாளர் தங்கப்பாண்டி, மதிமுக மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மொக்கப்பண் உள்ளிட்டோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த போட்டியினை சுருளிப்பட்டியைச் சார்ந்த சேகர் செல்வன் மற்றும் தேனி மாவட்ட காளைகள் வளர்ப்பு நலச்சங்க துணைத் தலைவர் எம்.ஆர் ராஜதுரை உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த எல்கை பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்றிருந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
இதையும் படிங்க: திருவாரூர் தியாகராஜர் கோயிலில் வேட்டி சேலை அணிந்து வெளிநாட்டினர் சாமி தரிசனம்!