தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக திமுக சார்பில் மகாராஜனும், அதிமுக சார்பில் லோகிராஜனையும் அக்கட்சிகளின் தலைமை அறிவித்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களான இருவரும், ஆண்டிபட்டி தொகுதிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டது முதல் நாளிலே தங்களது பலத்தை வெளிக்காட்ட ஆயத்தமாகினர்.
கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களில் அடுத்தடுத்து தொகுதிக்கு வருகை புரிந்த அண்ணன், தம்பிகளை வரவேற்பதற்கு திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சுமார் ஆயிரக்கணக்கானோர் கூடி வழிநெடுங்கிலும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.
மேலும் பட்டாசு வெடித்தும், தேவராட்டம் ஆடியும், தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் ஆண்டிபட்டி நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை - தேனி சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அதிகமான வாகனத்தில் பிரசாரத்திற்கு வந்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் கண்காணிப்பாளர் உதயகுமார் ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மீது 4 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.