தேனி: மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 'கிராம சபை' கூட்டம் (Grama Sabha) இன்று (அக்.2) நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக, தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரண்மனைபுதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் கூட்டப்பட்டு நடத்தப்பட்டது.
கூட்டம் தொடங்கிய முதலே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள குறைகளை ஊராட்சித் தலைவர் பிச்சையிடம் பல கேள்விகளை எழுப்பினர். அதைத்தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை குறித்து போனில் வைத்திருந்த புகைப்படங்களை காட்டி ஆதாரங்களுடன் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
ஊராட்சி பகுதியில் முறையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், மழை தண்ணீர் வீடுகளுக்குள் செல்வதாகவும் கழிவுநீர் செல்ல முறையான வழித்தடம் அமைக்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சாக்கடை கலந்த குடிநீர் குடிக்கும் சூழ்நிலை இருப்பதாக இளைஞர்கள் கூறினர். இதற்கு பதில் கூற முடியாமல் ஊராட்சி தலைவர் திணறி வாயடைத்து போனார்.
இளைஞர்கள் தங்கள் குறைகள் குறித்து முன்வைத்து கொண்டிருந்த போதே, அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் ஒவ்வொருவராக கலைந்து செல்ல முற்பட்டனர். அப்போது ஊராட்சி நிர்வாகிகள், தாங்கள் படும் பாட்டை விளக்கி குற்றம்சாட்டினர். பின்னர், கிராம சபை கூட்டத்திற்கு பொதுமக்கள் வராததால் 100 நாள் வேலைக்கு செல்வோரை கூப்பிட்டு வந்து கலந்துகொள்ள வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால், 'ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவது' போல், பொதுமக்களை இல்லாத நிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பின்னர், வார்டு உறுப்பினர் ஒருவர் தன்னுடைய பகுதியில், கழிவுநீர் சுத்தம் செய்யாமல் இருப்பதாகவும்; உடனே இப்போதே வந்து தீர்த்து வையுங்கள் என பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டார்.
பின்னர், 'ஆளே விட்டா போதும்டா சாமி' என்பது போல், ஊராட்சி தலைவர் உட்பட கிராம சபை கூட்டத்தின் பிரதிநிதிகள் கிராம சபை கூட்டத்தை முடிந்தது என்று கலைந்து செல்கின்ற முயன்றனர். அப்போது, 'பதில் சொல்லிவிட்டு போங்கள்' என இளைஞர்கள் அவர்களை முற்றுகையிட்டு 'சமூக தணிக்கை' அறிக்கை நகலை கேட்டபோது, 'அதெல்லாம் தர முடியாது' என்று கூறிய ஊராட்சி செயலாளர் ரவி, அரசு அதிகாரிகள் கையெழுத்திட வேண்டிய சமூக தணிக்கை அறிக்கை ஆவணத்தை தூக்கி எறிந்ததால் இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், கிராம சபை கூட்டம் பரபரப்பாக மாறியது. இது குறித்து அரண்மனைபுதூர் ஊராட்சி சேர்ந்த இளைஞர் கூறுகையில், 'அரசின் சட்ட விதிகளை மதிக்காமல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. 'மதச்சார்பின்மை' உள்ள இடங்களில் கிராம சபை கூட்டம் நடத்தக்கூடாது என்ற விதிகள் இருக்கும் நிலையில்; அது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கடந்த ஆண்டு கூறினோம். ஆனால், மீண்டும் கோயில் பகுதியில் கிராம சபை கூட்டம் நடத்தி இருப்பதாக' குற்றம்சாட்டினர்.
'மேலும், கடந்த ஆண்டு கிராம சபை கூட்டத்தில் சமூக தணிக்கை அறிக்கையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட எந்த ஒரு அரசு அதிகாரியும், ஊராட்சித் தலைவரும் கையெழுத்து இடாமல் இருந்தது. இதன் நகலை கேட்டதற்கு, தங்களை மிரட்டும் நோக்கத்தில் தங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 100 நாள்கள் வேலைக்கு சென்ற பெண்களை வரவழைத்து கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வைக்கின்றனர். அவர்கள் 10 நிமிடம் கூட அமராமல் எழுந்து சென்று விடுகின்றனர்' என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'தங்கள் பகுதியில் நடக்கும் இந்த கிராம சபை கூட்டத்தின் வலிமையை, அப்பாவி பொதுமக்களுக்கு எடுத்துரைத்து இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ஊராட்சி மன்ற தலைவர் இல்லாமல் கிராம சபை கூட்டம்! மக்கள் புறக்கணிப்பா? இல்ல தலைவர் அவமதிப்பா?