தேனி: பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம், D.வாடிப்பட்டி, சில்வார்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது.
இப்பகுதிகளில் பூவன், நாளிப்பூ, ரஸ்தாலி, செவ்வாழை உள்ளிட்ட ரகங்கள் விளைவிக்கப்பட்டு, வெளிமாநில மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது குள்ளபுரம் பகுதியில் விவசாயிகள் நடவு செய்துள்ள வாழை, தார் விட்டு 25 சதவீத விளைச்சலுடன் உள்ளது.
இந்நிலையில், இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழையில் இலைக்கருகல் என்று அழைக்கப்படும் காஞ்சார நோய் தாக்குதல் தொடங்கியுள்ளது. இதில் வாழை இலைகள் காய்ந்து வருவதோடு, வாழை பிஞ்சுகள் மற்றும் 25 சதவீத விளைச்சல் உடைய வாழைக்காய்கள் உரிய விளைச்சல் அடையாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்த வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், வாழைக்காய் அறுவடை செய்து இரண்டு ஆண்டுகளுக்கு வாழை இலை அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு முற்றிலும் வாழை இலை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, வாழை விவசாயத்தை முற்றிலும் பாதித்து வரும் காஞ்சார நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேளாண் துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு, நோய் மேலும் பரவாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கை குறித்து விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. அறநிலையத்துறை இணை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!