தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த இசைக்கலைஞர்களான சரஸ்வதி, மாரிச்சாமி, சுப்ரமணி ஆகிய மூன்று குடும்பத்தினரும் நில அபகரிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில்’ “தங்களது குடும்பத்தினருக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் ஆண்டிபட்டி ரயில்வே ரோடு அருகே அமைந்துள்ளது. சுயமாக சம்பாதித்து இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக விவசாயம் செய்து வந்த இந்நிலத்தில், கடந்த சில ஆண்டுகளாக போதிய தண்ணீர் வசதி இல்லாததால் உழவுப் பணிகள் மேற்கொள்ளாமல் தரிசாக கிடந்துள்ளது.
இந்நிலையில், அந்த நிலத்தை ஆண்டிபட்டியை சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் மற்றும் தங்கவேல் என்பவர்கள் தங்களுக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடினர். இதையடுத்து சில தினங்களுக்கு முன் வில்லங்க சான்று பார்த்ததில் தங்கவேல் என்பவரை பவர் ஏஜென்ட்டாக நியமித்து எங்களது நிலத்தை அபகரித்தது தெரியவந்தது.
மேலும் நேற்றைய (11.08.20) தினம் மேற்படி நில அபகரிப்பாளர்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை ஏவி எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது தொடர்பாக ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றனர். மேலும், இது நிலம் சம்பந்தப்பட்டது என்பதால் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண சொல்கின்றனர். எனவே, சுயமாக சம்பாதித்த நிலத்தையும் அபகரித்து விட்டு, எங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மேளதாளம் இசைத்தவாறு தங்களது புகார் மனுவை அளிக்க வந்த இசைக்கலைஞர்களை அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் குறிப்பிட்ட நபர்கள் மட்டும் ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் மனுவை அளித்து விட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசின் சட்டத் திருத்தங்களை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்!