தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்த நிலையில் நல்ல விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாரானது.
இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பாகவே இந்த பகுதியில் நெல் அறுவடை பணிகளை தொடங்கிய நிலையில், கடந்த ஐந்து நாட்களாக அவ்வப்பொழுது சாரல் மழையும் அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக கனமழையும் பெய்ததால் மேற்கொண்டு அறுவடை பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து நிலங்களில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறுகையில், நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்து நீரில் மூழ்கி வருகிறது. தொடர்ந்து அறுவடை பணிகள் செய்ய முடியாததால் முற்றிலும் நெல் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நனைந்து சேதம் அடைந்து வருவதாகவும், நாள்தோறும் மழையில் நனையும் நெல்லை கூலியாட்டகளை கொண்டு உலர்த்தி பாதுகாத்து வருவதால், அதிக செலவு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் அறுவடை செய்த நெல்லையாவது கொள்முதல் நிலையத்தை திறந்து, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே கவுள்பாளையத்தில் செயல்படும் கல்குவாரியில் பாறை சரிந்து 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு