தேனி: வடபுதுப்பட்டியைச் சேர்ந்த வேலு மற்றும் மகேஸ்வரி தம்பதியினர் தேனியில் சக்தி ஆட்டோ பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தனர். 2010ஆம் ஆண்டு முதல் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் இவர்கள் வடபுதுபட்டியைச் சேர்ந்த ஊர் பொதுமக்களிடம் சீட்டு போடுவதாகக் கூறி, ஏராளமானோரை சேர்த்துள்ளனர். வடபுதுப்பட்டியில் இந்த தம்பதிக்கு சொந்த இல்லம் மற்றும் தேனியில் சொந்தமாக தோட்டம் இருப்பதால் இவர்களை நம்பி ஏராளமான பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் பணம் கொடுத்துச் சீட்டுப் பணமும் கட்டி வந்துள்ளனர்.
ஆரம்ப காலகட்டத்தில் சீட்டுப் போட்ட மக்களுக்கு முறையாகப் பணம் கொடுக்கப்பட்டதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களிடம் பணத்தைப் பெற்று விட்டு திரும்பித் தராமல் ஏமாற்றிவிட்டதாக ஊர் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து ஊர் மக்கள், மகேஸ்வரியிடம் கேட்டபோது, ''கரோனா காலகட்டத்திற்குப் பிறகு பைனான்ஸ் நிறுவனம் நெருக்கடியில் இருப்பதாகவும், தங்களின் சொத்துகளை விற்று மக்கள் பணத்தை திருப்பித் தருவதாக தெரிவித்தார்” என்று ஊர் மக்கள் கூறினர்.
ஆனால், அதன் பிறகு இப்போது தருகிறேன், அப்போது பணம் தருகிறேன் என்று கூறி அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மகேஸ்வரியின் இல்லத்திற்கு சென்று பார்த்த போது அவர்களது வீடு பூட்டி இருந்ததாகவும், மகேஸ்வரியை தொடர்பு கொள்ளும் போது அவர்களின் எண் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருந்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
வடபுதுப்பட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்களிடம் வேலு மற்றும் மகேஸ்வரி தம்பதியினர் 45 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக ஊர் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தேனி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஊர் பொதுமக்கள் புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் வடபுதுபட்டியில் உள்ள வேலு, மகேஸ்வரியின் இல்லத்தை வேறு ஒருவர் விலைக்கு வாங்கி விட்டதாக கூறி அந்த நபர் வீட்டிற்கு வருகை தந்தார். இதை அறிந்த ஊர் மக்கள் அவர்களின் வீட்டின் முன்பு கூடி, அவர்களை தடுத்து வெளியேற்றி, எங்கள் பணம் வரும் வரை இந்த வீட்டிற்கு யாரும் வரக்கூடாது என்று ஊர் பொதுமக்கள் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பைனான்ஸ் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட அன்பழகன் பேசுகையில், “நான் பணி ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்தை மொத்தமாக செலுத்தினேன். எங்களுக்கு வீடு, தோட்டம் எல்லாம் இருக்கிறது என்று கூறியதால் நாங்கள் பல பேர் பணம் செலுத்தினோம். தங்கள் பிள்ளைகளுக்கு பணம் சேர்த்துவிட்டு எங்களை ஏமாற்றி விட்டனர்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: Theni:காலாவதியான ஐஸ்கிரீம்கள் பறிமுதல்; தேனி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி