கரோனா நோய்த் தொற்று தேனி மாவட்டத்தில் தீவிரமாக பரவி வருகிறது. பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதிப்பு கூடுதலாக உள்ளது.
இந்நிலையில், பெரியகுளம் கிளைச் சிறையில் பணியாற்றும் முதன்மை சிறைக் காப்பாளர், பயிற்சி காப்பாளர், இரண்டு காப்பாளர்கள் மற்றும் கைதிகள் என மொத்தம் ஒன்பது பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நோய் தொற்றால் பாதிப்படைந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர், பெரியகுளம் கச்சேரி சாலையில் உள்ள கிளைச்சிறை வளாகம் முழுவதும் நகராட்சியினரால் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.
மேலும், சிறைக்கு அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த வடபுதுபட்டி கிராம நிர்வாக அலுவலருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதியானதால், தாலுகா அலுவலகப் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு அலுவலகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.