கரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புவோர் எல்லைப் பகுதியில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு நோய்த் தொற்று கண்டறியப்பட்டால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேலும், நோய்த் தொற்று உறுதி செய்யப்படாதவர்களை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிராவில் கூலி வேலை செய்து வந்த ஆண்டிபட்டியைச் சேர்ந்த வேலுசாமி(45) என்பவர், கடந்த 19ஆம் தேதி சொந்த ஊர் திரும்பிய நிலையில், இந்த முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அப்போது சோதனைச் சாவடியில் இவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நோய் உறுதி செய்யப்படவில்லை. இதனையடுத்து முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை திடீரென வேலுசாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், வரும் வழியிலே அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் கூறினர். இது குறித்து ஆண்டிபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மூச்சுத் திணறி நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு