கரோனா நோய்த் தொற்று தேனி மாவட்ட மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய நோயை விரட்ட மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதிலும் குறைந்த பாடில்லை.
இந்நிலையில், தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கனி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர், போடி அரசு மருத்துவமனை மருத்துவர், உத்தமபாளையம் மதுவிலக்கு காவலர், வீரபாண்டி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் என நேற்று (ஆகஸ்ட் 21) ஒரே நாளில் 122 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 131ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 747பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 ஆயிரத்து 258பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் பொட்டிப்புரம் அருகிலுள்ள புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர், சீலையம்பட்டியை சேர்ந்த 74 வயது முதியவர், தேனி எடமால் தெருவை சேர்ந்த 53 வயது பெண்மணி என மூவர் நேற்று உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரித்துள்ளது.