தேனி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்ரல்.30) தேனி மாவட்டம், தேனி ஊராட்சி ஒன்றியம், ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 114 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 40 பணிகளை திறந்து வைத்து, 74 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 102 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 10,427 பயனாளிகளுக்கு 71 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தேனி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள். சட்டத்துறை சார்பில் தேனியில் 89 கோடியே 1 லட்சத்து 11 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள தேனி அரசு சட்டக் கல்லூரிக் கட்டடம் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சார்பில் மந்திசுனை – மூலக்கடை மற்றும் நாகலாபுரம், கொத்தப்பட்டி, கோகிலாபுரம், கோடாங்கிபட்டி, எ.புதுப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டடங்கள், மற்றும் மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட 5 கோடியே 32 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவிலான பணிகள்.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை: சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் குன்னூர், மார்க்கையன் கோட்டை மற்றும் சிலமலை ஆகிய இடங்களில் 11 கோடியே 40 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள்.
பள்ளிக்கல்வித் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை: பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஜி.கல்லுப்பட்டி, பெரியகுளம், பூதிப்புரம், மேலசிந்தலைச்சேரி, எருமலைநாயக்கன்பட்டி, அம்மாபுரம் மற்றும் தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 7 கோடியே 62 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகங்கள், நூலகங்கள் மற்றும் குடிநீர் வசதிகள்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் போடிநாயக்கனூர் நகராட்சியில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி தளம், உடற்பயிற்சிக்கூடம் என மொத்தம் 114 கோடியே 21 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் முடிவுற்ற 40 திட்டப் பணிகளைத் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டப்பட்ட திட்டப் பணிகள் : வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், இலட்சுமிபுரத்தில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் களகண்காணிப்பு மற்றும் விவசாயிகளுக்கான தகவல் மையக் கட்டடம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இராசிங்காபுரம், எருமலைநாயக்கன்பட்டி, அப்பிபட்டி, சருத்துப்பட்டி, கு.லட்சுமிபுரம், எஸ்.கதிர்நரசிங்கபுரம், சில்வார்பட்டி, பெரியகுளம், க.புதுப்பட்டி, குச்சனூர், லோயர்கேம்ப், மேலசொக்கநாதபுரம், சில்லமரத்துப்பட்டி, கன்னியப்பிள்ளைபட்டி, கொடுவிலார்பட்டி, கோட்டூர், கொண்டமநாயக்கன்பட்டி, வாய்கால்பாறை ஆகிய இடங்களில் 32 கோடியே 85 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் உள்ளிட்ட, என மொத்தம் 74 கோடியே 21 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 102 புதிய திட்டப் பணிகளுக்குத் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
நலத்திட்ட உதவிகள் : வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மகளிர் திட்டம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வனத்துறை, பால்வளத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளின் சார்பில் முதலமைச்சர் 10,427 பயனாளிகளுக்கு 71 கோடியே 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.