தேனி: முல்லைப் பெரியாறு அணையில் பருவகாலங்களின்போது ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்துப் பராமரிக்க, மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த மூவர் குழுவுக்கு உதவியாக, 5 போ் கொண்ட துணைக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மத்திய நீர்வளத்துறை துணை கண்காணிப்புக் குழு முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, மத்தியக் குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்தனர். தற்போது அணையின் நீர்மட்டம் 131 அடியாக உயர்ந்து உள்ள நிலையிலும், வடகிழக்கு பருவமழை பெய்து வருவதன் காரணமாகவும் மத்திய நீர்வளத் துணைக் கண்காணிப்புக் குழுவினர் ஆய்வு செய்வதற்காக திட்டமிட்டனர்.
அதன் அடிப்படையில், மத்திய நீர்வள துணைக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ்குமார், தமிழக பிரதிநிதிகளான பெரியாறு சிறப்புக் கோட்டச் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார் மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகளான கட்டப்பனை நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் அனில் குமார், உதவிப் பொறியாளர் அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் அணைப் பகுதிகளில் இன்று (நவ.15) ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடி படகுத் துறையில் இருந்து தமிழக அதிகாரிகள் தமிழக அரசு படகிலும், கேரள அதிகாரிகள் வல்லக்கடவு வழியாக சாலை மார்க்கமாக ஜீப் வாகனத்தில் அணைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இக்குழுவினர் பிரதான அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகுப் பகுதி மற்றும் மழையின் அளவு, அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், நில அதிர்வு கருவிகள் மற்றும் மதகுப் பகுதியில் நீர்க்கசிவு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாலை குமுளியில் உள்ள பெரியாறு அணை கண்காணிப்புக் குழு அலுவலகத்தில், துணைக் குழுவினர் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர் என்றும், இந்த கூட்டத்தில் அணைப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வு சம்பந்தமான அறிக்கையை மத்திய நீர்வள தலைமைக் கண்காணிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: திமுக பிரமுகரிடம் மோசடி செய்த ராசிபுரம் கவுன்சிலர்.. குற்றப்பிரிவு போலீசார் விசாரணை!