தேனி: கூடலூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியைச்சேர்ந்தவர், கெளதம்( 31). இவர் கடந்த 9 வருடங்களாக எல்லை பாதுகாப்புப்படையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் மேற்கு வங்காளத்தில் பாக்டோக்ரா அருகில் உள்ள டாங்கிபிரா பகுதியில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படைமுகாமில் சிவில் எலக்ட்ரீசியன் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி பணியில் இருந்தபோது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி, மயக்கநிலையில் தரையில் கிடந்தவரை, அங்கு இருந்தவர்கள் உடனடியாக இஸ்லாம்பூர் துணை பிரிவு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அவரது உடல் இன்று காலை சொந்த ஊரான தேனி மாவட்டம், கூடலூருக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கௌதமின் வீட்டிற்கு முன்பாக உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. பின்னர் அதனைத்தொடர்ந்து அங்கிருந்து கூடலூர் அரசு மின்மயானத்திற்கு, அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது.
மின் மயான வளாகத்தில் கௌதமின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறந்த கௌதமுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இச்சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அவுட்சோர்சிங் முறைக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் தினக்கூலி பணியாளர்கள் போராட்டம்