ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு திமுக சார்பில் மகாராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மாலை முதல் வேட்பாளர் மகாராஜன், தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். ஆண்டிபட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டிலிருந்து பிரச்சார வாகனத்தில் தனது பரப்புரையை தொடங்கி தேனி மதுரை சாலை வழியாக பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மக்களின் முக்கிய பிரச்னையான குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படும். முல்லை பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள 45 கண்மாயில் நீர் நிரப்பப்படும் எனத் தெரிவித்தார். மேலும் தனக்கு வாக்களித்தால் ஆண்டிபட்டியை அரசம்பட்டியாக மாற்றுவேன், என்று உறுதியளித்தார்.
இந்த பரப்புரையில் திமுக பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனர்.