தேனி: போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு தேனி அருகில் உள்ள அரண்மனைபுதூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போதை பொருள் நூண்ணறிவு பிரிவு காவல்துறையினர் ஒரு நபரை அனுப்பி கஞ்சாவை வாங்க வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்கு மறைந்து இருந்த போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக யோவான் என்பவரையும் அவரது தம்பி வீரமுத்து குமார் என்பவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். அங்கு கூடிய இவர்களின் உறவினர்கள் காவலர்கள் அழைத்து செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவலர்கள் வேறு வழியின்றி திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீண்டும் யோவான் மற்றும் வீரமுத்துகுமார் இருவரும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தேனி போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை ஆய்வாளர் சத்யா, காவலர்கள் ராஜா மற்றும் ஸ்டாலின் ஆகிய 3 பேரும் கஞ்சா விற்பனை செய்து வந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்ததாக கூறப்படுகிறது.
இருவரையும் கையில் விலங்கு மாட்டி ஆட்டோவில் தேனி மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். கைது செய்யபட்டவர்களின் உறவினர்கள் பரபரப்பாக இயங்கும் முக்கிய வழித்தடமான தேனி புறவழிச்சலை பகுதியில் கூடி ஆட்டோவை வழிமறித்து காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்களை மிரட்டியும், கை விலங்கோடு அழைத்து சென்றவர்களை உடனடியாக கை விலங்கினை அவிழ்த்துவிட்டு விடுவித்து சென்றனர். இந்த சம்பவம் முழுவதும் காவல்துறையினரால் வீடியோ எடுக்கபட்டு உள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர், தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தப் புகாரை அடுத்து காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் மற்றும் விசாரனைக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற போன்ற பிரிவுகளின் கீழ் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தேனி மாவட்ட தலைவர் அழகுராணி உள்பட 19 பேர் மீது தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், காவலர்கள் தன்னை தாக்கியதாக கூறி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேனி மாவட்ட தலைவர் அழகுரானி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளார். காவலர்கள் கஞ்சா விற்பனை செய்பவர்களிடம் மாமூல் கேட்ட போது அவர்கள் தர மறுத்ததாகவும், இதனை அடுத்து பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவங்களை காவல் துறையினர் அரங்கேற்றியிருப்பதாக வழக்கு பதிவு செய்யபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல் அருகே பகீர் சம்பவம் - பழைய இரும்பு வியாபாரி வெட்டிப்படுகொலை!