தேனி: பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற பேசுபொருளான படங்களை இயக்கியவர், இயக்குநர் மாரி செல்வராஜ். இவரது படங்களில் சாதி ஒடுக்குமுறைகள் ஆழமாகப் பேசப்பட்டு இருக்கும். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், மாமன்னன். இந்தத் திரைப்படம் வருகிற 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது எனப் படக் குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. முன்பெல்லாம் மாரி செல்வராஜ் இயக்கிய படங்களைச் சுற்றி சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் தற்போது மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இருந்தார்.
அவர் முன்பு பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “தேவர் மகன் படம் எனக்கு நிறைய வலி ஏற்படுத்தியது. படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம் தான் மாமன்னன் திரைப்படம் உருவாவதற்குக் காரணம். எல்லா இயக்குநர்களும் தேவர்மகன் பார்த்து விட்டுத் தான் படம் எடுப்பார்கள், நானும் அப்படித் தான். தேவர்மகன் பார்த்து விட்டுத் தான் பரியேறும் பெருமாள் படம் எடுத்தேன், தேவர் மகன் பார்த்துவிட்டுத் தான் கர்ணன் படம் எடுத்தேன், தேவர்மகன் பார்த்து விட்டுத் தான் மாமன்னன் படமும் எடுத்து உள்ளேன்.
தேவர் மகன் படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம் தான் இந்தப் படம். இசக்கி கதாபாத்திரத்தில் எனது அப்பா இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து தான் இந்த படத்தை எடுத்து உள்ளேன்” என தேவர் மகன் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்து பேசி இருந்தார். இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியது ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. மாரி செல்வராஜூக்கு ஆதராவாகவும் எதிராகவும் ரசிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சாதி மோதல்களை உருவாக்க நினைக்கும் மாமன்னன் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று தேனியில் சமீபத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இந்நிலையில், இன்று தேனியில் உள்ள வெற்றி திரையரங்கில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மாமன்னன் திரைப்படத்தை திரையிடக்கூடாது என திரையரங்கும் மேலாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
மேலும் இந்தத் திரைப்படத்தால் சாதி மோதல்கள் உண்டாகும் நிலை இருப்பதால் படத்தை திரையிடக்கூடாது என்றும்; மீறி படம் திரையிடப்பட்டால் திரையரங்கம் மீது தாக்குதல் நடைபெறலாம் எனவும் மிரட்டல் விடுத்தனர். இதற்கு முன்பே மாமன்னன் திரைப்படத்திற்கு எதிராக தேனியில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது திரையரங்கம் மீது தாக்குதல் நடைபெறும் என மிரட்டல் விடப்பட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மத போதகர் மீது தாக்குதல்: திமுக எம்.பி.க்கு வந்த ஓலை - பரபரப்பான பின்னணி?