தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் சசிபிரதாப்(44). தேனி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டுநராக பணிபுரிந்துவருகிறார். இவர் தற்போது திண்டுக்கல் - வருஷநாடு மார்க்கத்தில் பேருந்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இன்று பிற்பகல் தேனி புதிய பேருந்து நிலையத்திற்குள் சசிபிரதாப் பணியில் இருந்த, பயணிகள் பேருந்து நுழைந்துள்ளது. அப்போது அந்த பகுதியில் அதிமுக தேனி நகர செயலாளரும், வழக்கறிஞருமான கிருஷ்ணகுமார் காரில் வழியை மறித்து நின்றுள்ளார். இதையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் ஒலி எழுப்பி உள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த நகர செயலாளர் தனது காரிலிருந்து இறங்கி ஓட்டுநரை பார்த்து திட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு பேருந்து ஓட்டுநரும் திட்டியதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து நகர செயலாளரும், அவரது வாகன ஓட்டுநரும் சேர்ந்து அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.
இதில் பேருந்து ஓட்டுநர் சசிபிரதாப் காயமடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து பேருந்து ஓட்டுநர்களும் ஒன்றுகூடி எதிர்த்தவுடன் நகர செயலாளர் அங்கிருந்து தனது வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
இதனால் பேருந்து நிலையத்தில் இருந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு சென்ற காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.