தேனி மாவட்டம் குரங்கணி அருகே உள்ள கொழுக்கு மலை சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலாளி லட்சுமணபாண்டி(46). இவரும், போடி கோடாங்கிபட்டியைச் சேர்ந்த சேகர் (52) என்பவரும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக நேற்று குரங்கணி வனப்பாதை வழியாக போடிக்கு நடந்துசென்றுவிட்டு மீண்டும் அதே பாதையில் வீடு திரும்பினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தோலார் என்ற வனப்பகுதியில் காட்டெருமை ஒன்று இருவரையும் துரத்தியுள்ளது. இதில் லட்சுமணபாண்டியை காட்டெருமை கழுத்தில் கொடூரமாக குத்தியதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காட்டெருமை துரத்தியதில், பயந்து ஓடிய சேகர் மலைப்பகுதியில் தடுமாறி விழுந்து காயமடைந்தார். இதனையடுத்து குரங்கணிக்கு வந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் லட்சுமணபாண்டியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: நகரத்துக்குள் வந்த காட்டெருமை: பொதுமக்கள் அதிர்ச்சி!