தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில்சிக்கையன்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜ் (68). இவர், கடந்த 2017ஆம் ஆண்டு அவரது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை அழைத்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் உத்தமபாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கானது மகிளா விரைவு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுற்று, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பாலியல் ரீதியாக சிறுமிக்கு தொந்தரவு செய்த குற்றத்திற்காக முதியவர் நடராஜனுக்கு ஐந்து வருடம் சிறை தண்டனையும், 1000 ரூபாய அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அதை செலுத்தத்தவறினால் தொடர்ந்து 1 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி கீதா தீர்ப்பளித்தார்.
பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பாக, ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக, ஒரு மாத காலத்தில் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, குற்றவாளி நடராஜனை மதுரை மத்திய சிறைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: குத்துச்சண்டை பயிற்சியாளர் பாலியல் குற்றச்சாட்டில் கைது!