தேனி மாவட்டம் போடி கே.எம்.எஸ். லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருக கணேஷ். இவருக்கும் போடி மதுரை வடக்குத் தெருவைச் சேர்ந்த மகாராஜன் மகள் லிங்கேஸ்வரி (27) என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. தற்போது மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. பாலமுருக கணேஷ் கேரள மாநிலம் மூணாறில் பூக்கடை நடத்தி வருகிறார்.
தற்போது நிலவி வரும் லாக்டவுனால் மாநில எல்லைகள் மூடப்பட்டதால் கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனது குழந்தையுடன் வீட்டில் வசித்து வந்த லிங்கேஸ்வரி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் தெரியாமல் தவித்த பெற்றோர்கள் லிங்கேஸ்வரியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாலமுருக கணேஷின் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து இறந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லிங்கேஸ்வரியின் தந்தை மகராஜன் புகார்: திருமணம் செய்த நாளில் இருந்தே தனது மகள் லிங்கேஸ்வரியை அவரது கணவர் மற்றும் குடும்பத்தார் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது, விழா காலங்கள், விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். இந்தக் கொடுமை தாங்காமல் தனது மகள் தற்கொலை செய்துகொண்டார் என போடி காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யும் கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு