நீலகிரி: கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து கர்நாடகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவலாக இருந்தது. இந்நிலையில், பந்திப்பூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டுப்பன்றிகள் திடீரென உயிரிழந்தன. இதன் காரணம் குறித்து உடற்கூராய்வு மேற்கொண்டு பார்த்ததில், ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் தாக்கி பன்றிகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக சீகூர் வனப்பகுதியில் அடுத்தடுத்து சுமார் 15க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் உயிரிழந்தன. இவைகள் அனைத்தும் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சலால் இறந்திருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
இந்த பன்றிக் காய்ச்சல் நாட்டுப் பன்றிகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முதுமலை யானைகள் முகாமைச் சுற்றி ஏராளமான காட்டுப்பன்றிகள் உலா வரும் நிலையில், அவைகளை எல்லைப் பகுதிக்குள் நுழையாமல் தடுக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து வனப்பகுதியில் இறந்த காட்டுப்பன்றிகள் பாதுகாப்புடன் அழிக்கப்பட்டது. அதேபோல் வனப்பகுதியில் வேறு ஏதேனும் பன்றிகள் இருந்துள்ளனவா என வனத்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுவன் மரணம்? உறவினர்கள் சாலை மறியல்!