கரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. குறிப்பாக சுற்றுலாத் தலங்களை மூட உத்தரவிட்டுள்ளது. இன்றுமுதல் (ஏப். 20) உத்தரவு அமலுக்கு வந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் உதகைக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகைதருவார்கள்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிப்பார்கள். மேலும் வன விலங்குகளைக் காணவும் யானை சவாரி செய்யவும் முதுமலை புலிகள் சரணாலயத்திற்குச் செல்லவும் ஆர்வம் காட்டிவருவார்கள்.
இந்நிலையில் இன்றுமுதல் உதவி அரசு தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா உள்ளிட்ட அனைத்துப் பூங்காக்களும், முதுமலை புலிகள் சரணாலயமும் மூடப்பட்டுள்ளன.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கால்பதித்த சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதன் காரணமாக சுற்றுலாத் தலங்கள், சுற்றுலாப் பயணிகளை நம்பியுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றாத கடைகளுக்கு அபராதம்!