நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட ஜெ.கொலக்கம்பை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். அந்த கிராமத்திற்கு செல்ல முறையான பேருந்து வசதி கிடையாது.
மேலும் வீரகாடு வழியாக சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் ஒற்றையடிப்பாதையில் நடந்து வர வேண்டியுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் அரிசி சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்க சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரம் வரை ஜெகதளா கிடங்கு பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைக்கு நாள்தோறும் சென்றுவருகின்றனர்.
அங்கு வசிக்கும் மக்கள் குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் உள்ளிட்டவைகள் இன்றி தவித்துவருகின்றனர். அதுமட்டுமல்லாது இரவு நேரங்களில் வனவிலங்குகளால் அங்குள்ளவர்களுக்கு நாள்தோறும் தொந்தரவு ஏற்பட்டு வருகிறது.
இப்பகுதியில் உள்ளவர்கள் கேரட், முட்டைகோஸ் உள்ளிட்டவைகளை பயிரிட்டு விவசாயம் செய்துவருகின்றனர். போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை மூட்டைகளாக கட்டி இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை சுமந்துவருகின்றனர்.
வெகுநாட்களாக அரசிடம் சாலை அமைக்கவும், நியாயவிலைக் கடை பொருட்களை அருகாமையில் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துவருகின்றனர். இதுவரை இவர்களுக்கு செவிசாய்க்காத அரசு அலுவலர்கள் வரும் காலங்களில் சாலை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும் என்பதே கொலக்கம்பை கிராம மக்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது.