நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பழங்குடி கிராமங்களில் அதிகளவில் பழங்குடியின மக்கள் வாழ்ந்துவருகின்றனர். பெண்கள் அப்பகுதியிலிருந்து வேலைக்குச் செல்ல வேண்டுமென்றால் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
அவ்வாறு சென்றாலும் பேருந்துக் கட்டணம், மதிய உணவு போன்றவற்றால் குறைந்த வருவாயே அவர்களுக்கு மிஞ்சும். இதனால் பெண்கள் வேலைவாய்ப்பின்றி வறுமையில் வாடி வந்தனர்.
இந்நிலையில் பழங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காக தனியார் தொண்டு நிறுவனம், இயற்கையில் கிடைக்கும் தேன் மெழுகைக் கொண்டு சோப்பு, லிப் பாம் தயாரிக்கும் கூடாரம் அமைத்துக் கொடுத்துள்ளது.
இது குறித்து பழங்குடி இன பெண்கள் கூறும்போது, ‘குளியல் சோப்புகள் பெரும்பாலும் காஸ்டிக் சோடா உள்ளிட்ட ரசாயன பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் நாங்கள் தேங்காய் எண்ணெய், தேன் அடை உள்ளிட்டவற்றை மட்டுமே பயன்படுத்தி சோப் தயாரிக்கின்றோம்.
தமிழ்நாடு அரசு எங்களுக்கு சோப் தயாரிக்கும் கூடாரம் அமைத்துத் தர வேண்டும். அதேபோல், பர்லியார், குன்னூர், அதனைச் சுற்றியுள்ள சுற்றுலாப் பகுதிகளில் விற்பனைக் கூடம் அமைத்து தந்து எங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவ வேண்டும்' என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
.