நீலகிரி மாவட்டம் குன்னூர் உலிக்கல் ஊராட்சிக்கு உள்பட்ட நெடிமந்து கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட தோடர் இன ஆதிவாசி குடும்பங்கள் உள்ளன. கிராமத்திற்கு செல்லும் சாலை கடந்த 8 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர்.
இங்கிருந்து 2 கி.மீ., தொலைவில், வசிக்கும் குறும்பர் இன ஆதிவாசி மக்களும் இந்த சாலையை மாற்றுப்பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். சாலையை சீரமைக்கக் கோரி பல முறை புகார்கள் கொடுத்தும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ஆதிவாசி கிராமங்களுக்கு மத்திய அரசு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யும்போது, அவற்றை இந்த கிராமங்களுக்கு பயன்படுத்தாமல் வேறு எந்த திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது என அப்பகுதியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து பல முறை அலுவலர்களுக்கு மனுக்கள் கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அரசு உயர் அலுவலர்கள் இது குறித்து ஆய்வு நடத்தி, சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: உயிரைக் குடிக்கும் குடிநீர்.. தாகம் தீர்க்குமா தமிழ்நாடு அரசு!