நீலகிரி: கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று (ஜூன் 18) உதகையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு வனத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
வனவிலங்குகளுக்கு கரோனா
செய்தியாளர்களிடம் பேசிய கா. ராமச்சந்திரன், "தமிழ்நாட்டில் சிங்கங்களைத் தவிர வேறு எந்த வன விலங்குகளுக்கும் கரோனா தொற்று இல்லை. வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களில், இரண்டு வயதான சிங்கங்கள் இருப்பதால் அவற்றைக் காப்பாற்ற மருத்துவக் குழு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது.
மனித-விலங்கு மோதல்
கூடலூர் பகுதியில் அடிக்கடி காட்டுயானைகள், மனிதர்களைத் தாக்குவதைத் தடுக்க வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்குள் காட்டு யானைகள் வந்தவுடன் அந்தக் குழுவினருக்குத் தகவல் அளித்தால், உடனடியாக காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுவார்கள்.
வல்லுநர்களுடன் ஆலோசனை
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வருவதைத் தடுக்கும்விதமாக தோண்டப்பட்டுள்ள அகழிகளின் மேற்பரப்பில் கான்கிரீட் தடுப்பு அமைக்கவும், சோலார் மின்வேலி அமைக்கவும் வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்பட்டுவருகிறது. வல்லுநர்களின் பரிந்துரைப்படி, விரைவில் முடிவுசெய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்" என்றார்.
முன்னதாக உதகை மாரியம்மன் கோயிலில் 16 அர்ச்சகர்களுக்கு நிவாரணப் பொருள்கள், ரூபாய் 4 ஆயிரம் வழங்கினார்.
இதையும் படிங்க: 'தடுப்பூசி பாரபட்சத்தின் மூலம் திமுக அரசை அடிமையாக்க நினைக்கும் பாஜக' - முத்தரசன்