நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள அரசு கலை கல்லூரியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் வெளியூரைச் சார்ந்த மாணவர்கள் உதகையிலுள்ள பிற்படுத்தபட்டோர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு காரணமாக விடுதி மூடபட்டது. அதனால் மாணவர்கள் அனைவரும் சொந்த ஊருக்குச் சென்றனர். தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கபட்டுள்ளதையடுத்து ஒரு சில மாணவர்கள் உதகைக்கு வந்துள்ளனர்.
விடுதிக்குச் சென்ற அந்த மாணவர்கள் தங்களது அறைக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த மாணவர்களின் சூட்கேஸ், பேக் உள்ளிட்டவைகள் திறக்கப்பட்டு அதிலிருந்த லேப்டாப்கள், மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுசான்றிதழ்கள் உள்பட பல்வேறு பொருள்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து விடுதி காப்பாளரிடம் கேட்டபோது கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணிக்காக மாணவர்களின் உடமைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தனக்கு எதுவும் தெரியாது எனவும் அலட்சியமாக தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தங்களது உடமைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவிடம் புகார் மனு அளித்தனர்.