நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம், தன்னார்வ அமைப்பு சார்பில் முகக்கவசம் அணிவதன் அவசியம், குப்பைத் தொட்டிகள் வைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நிகழ்ச்சியை தொடங்கிவைத்து, அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
குன்னூரில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர் சந்திப்பு தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:புரெவி புயல் தாக்கம் நீலகிரி மாவட்டத்தில் இல்லை என்றாலும் மழை பெய்துவருகிறது. முன்னெச்சரிக்கையாக முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் செய்துவருகிறோம். ஏற்கனவே நிவர் புயலுக்கு எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோ அதே நிலை தொடரும்.
ஆபத்தான இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் குன்னூர் உதவி ஆட்சியர், ஆர்டிஓ தலைமையில் குழு அமைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நன்கு பயிற்சிபெற்ற மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் 40 பேர் தயார் நிலையில் உள்ளனர். அடுத்த பத்து நாள்களுக்கு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஆபத்தான மரங்கள் அதிகம் உள்ள நிலையில் கனமழை, பலமான காற்று வீசும்போது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.