நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பொக்காபுரம் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. முதுமலைப் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் காட்டுயானைகள் அதிக அளவில் சுற்றி திரிந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக 40 வயது மதிக்கதக்க ஆண் காட்டு யானை ஒன்று முதுகில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஒரே இடத்தில் நீண்ட நேரம் நின்றுக்கொண்டிருந்ததை வனத்துறை ஊழியர்கள் கண்டுள்ளனர். பின்னர் இதுகுறித்த தகவலை சிங்காரா வனச்சரகர் காந்தனுக்குத் தெரிவித்தனர்.
இதனையடுத்து புலிகள் காப்பக வெளிமண்டல கள இயக்குனர் ஸ்ரீகாந்த் உத்தரவின் பேரில், வனத்துறையினர் காயமுற்ற யானைக்கு இன்று முதல் சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக யானைகள் விரும்பி உண்ணக்கூடிய தர்பூசணி, வாழைப்பழம், பலாப்பழம் ஆகியவற்றில் காயத்தைக் குணமடையச் செய்யக்கூடிய மருந்து மாத்திரைகளை வைத்து அந்த யானையின் அருகே வைக்கப்பட்டது. அவற்றை அந்த யானை ஆர்வத்துடன் எடுத்து சாப்பிட்டது.
இதனிடையே யானையைத் தொடர்ந்து கண்காணிக்க தனி குழுக்கள் அமைக்கபட்டுள்ளன. தொடர்ந்து 3 நாட்களுக்கு இதே போல மருந்து மாத்திரைகள் வழங்கப்படும். காயம் குணமடையாவிட்டால் மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கவும் முதுமலைப் புலிகள் காப்பக அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: யானை கூட்டத்தை சாதுர்யமாக பைக் சத்தத்தால் விரட்டிய இளைஞர்கள்!