நீலகிரி: 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. சரியாக ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன். தமிழ்நாட்டில் ஆளும் திமுக, அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதனுடன் கூட்டணியில் உள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக - அதிமுக ஆகிய பிரதான கட்சிகளிடையே நேரடி போட்டி இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் பாஜக - காங்கிரஸ் கட்சிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக தங்களது கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்க பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. திமுக சார்பில் மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் இந்த பணிகளை நேரடியாகச் செய்து வருகின்றனர். அதிமுகவைப் பொறுத்தவரையில் "ஏற்கனவே உள்ள ஒன்றைரை கோடி உறுப்பினர்களுடன் மேலும் 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க உள்ளோம்" என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இப்படியாகத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் தமிழ்நாடு பாஜக மாநிலத்தில் 39 தொகுதிகளில் 9 தொகுதிகளைக் குறிவைத்து பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், ராமநாதபுரம், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தென்சென்னை, கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிகள் உள்ளதாகத் தெரிகிறது.பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கொங்கு மண்டலத்தில் அதிக கூட்டங்களை நடத்துவதோடு அப்பகுதியில் கூடுதல் முகாமிட்டு வருகிறார். அதேபோல், மத்திய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் முகாமிட்டு வருவதால் அந்த தொகுதியில் அவர் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டு வந்தது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் ஏப்ரல் 7-ஆம் தேதி பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் மாநில இளைஞர் அணித் தலைவர் ரமேஷ் சிவா, "பாஜகவில் தான் பட்டியலின மக்கள் உயர்ந்த பதவியில் உள்ளனர். பட்டியலினத்தைச் சேர்ந்த முன்னாள் மாநிலத் தலைவர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் இருந்து எம்பி ஆகிறார்" என்று பேசினார்.
இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் மாநிலத் தலைவரும், தற்போதைய மத்திய அமைச்சருமான எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிட பாஜக திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியில் எல்.முருகன் திமுக வேட்பாளரும், தற்போதைய அமைச்சருமான கயல்விழியிடம் வெறும் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.