நீலகிரி: தனியார் பள்ளியில் பணியாற்றிய தொழிலாளர் மீது தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.
ஊட்டியில் அருகே உள்ள மேரிஸ் ஹீல் பகுதியில் தனியார் பள்ளியின் தடுப்புச் சுவர் கட்டுவதற்கானப் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. இந்தப் பணியில் சுமார் ஐந்து தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று(அக்.14) மாலை அப்பகுதியில் மண் தோண்டும் பணியில் ஐந்து பேர் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பழைய கான்கிரீட் தடுப்புச் சுவர் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த ரமேஷ் என்பவர் மீது இடிந்து விழுந்தது. இதில் ரமேஷ் மண்ணிற்கு அடியில் சிக்கிக் கொண்டார். உடனடியாக அங்கு பணியில் இருந்தவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
மேலும் ரமேஷை மீட்கவும் முயற்சி செய்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊட்டி தீயணைப்புத் துறையினர் இடிபாட்டிற்குள் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரமேஷை ஜேசிபி இயந்திரம் கொண்டு இரண்டு மணி நேரம் போராடி உயிருடன் பத்திரமாக மீட்டனர். படுகாயத்துடன் மீட்ட ரமேஷை ஊட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்காளாக மழை பெய்ததின் காரணமாக மண் ஈரப்பதத்துடன் இருந்ததால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தொடரும் தற்கொலைகள்: ஆன்லைன் வகுப்பிற்கு செல்ஃபோன் கிடைக்காததால் மாணவி தற்கொலை