நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவது, தேயிலைத் தோட்டங்களை அழித்து சாலை அமைப்பது, நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் காட்டேஜ்கள் கட்டும் பணிகள் ஆகியவை பெருமளவில் நடைபெற்று வருகின்றன. ஆற்றினை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டுவதால் மழைப்பொழிவு காலங்களில் வெள்ள நீர்வரத்து அதிகரித்து பேரிடர் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள சந்திரா காலனி பகுதியில் நீரோடையின் குறுக்கே கட்டடம் கட்டப்பட்டு வந்துள்ளது. கடந்த மாதம் பெய்த கன மழையில் மண் நீரோடையில் நிறைந்து, தண்ணீர் செல்ல வழியின்றி, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலர்கள் இந்தப் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டு கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்தனர்.
ஆனால் நகராட்சி அலுவலர்களின் உத்தரைவையும் மீறி மீண்டும் டிராக்டர் உதவியுடன் மண் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டு அந்தப் பகுதியில் இருந்த நீரோடையை மீட்டுத் தர வேண்டும் என்று பொதுமக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் ஸ்டாலின் நடைப்பயிற்சி: உலா வரும் காணொலி!