நீலகிரி: கோவையை சேர்ந்தவர் பிரபல யுடியுபர் டிடிஎஃப் வாசன். இவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று தனது பயணத்தை வீடியோ பதிவு செய்து அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். லட்சக் கணக்கானவர்கள் இவரை சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
சமீப காலமாக பிரபல யுடியுபரான இந்த டிடிஎஃப் வாசன் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டுவது மற்றும் தலைக்கவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதால் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகைக்கு வந்த பிரபல யுடியுபர் டிடிஎஃப் வாசன் ஹில்பங்கு என்னும் பகுதியில் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கிச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் அவரை நிறுத்த முற்பட்ட போது நிற்காமல் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து ரோந்து பணியில் இருந்த புதுமந்து காவல் துறையினருக்கு இருசக்கர வாகனம் ஒன்று வேகமாக வருவதாக தகவல் தெரிவித்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுமந்த காவல் நிலையத்தை சார்ந்த உதவி ஆய்வாளர் செந்தில்குமார் HPF என்னும் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: நீலகிரியில் பிளாஸ்டிக் தடை இருக்கா? இல்லையா? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
அப்போது அப்பகுதியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த டிடிஎஃப் வாசனை மடக்கி பிடித்துள்ளார். பின்னர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்கியதன் காரணமாக மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்று வேகமாக இரு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது எனவும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை இயக்கியதன் காரணமாக தனக்கு அபராதம் விதிப்பதை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்த போது அதனை வாசன் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் வீடியோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். டிடிஎஃப் வாசனுக்கு அபராதம் விதித்த இக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: ஊட்டி மலை ரயில் பாதையில் உலா வந்த யானை.. வனத்துறையினர் திணறல்!