நீலகிரி: குன்னூர் நகராட்சியில் 26ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி, நடைபாதை, குழாய்கள் எதுவும் இல்லை. இடிந்து விழும் நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் அங்கன்வாடி பள்ளியினைச் சார்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள்.
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து, ஆரம்பக்கல்வி, குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியமான வளர்ப்பு, உணவு பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவைகள் தரப்படுகிறது. ஆனால், இங்கு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மழை நீர் உள்ளே தேங்குவதும், கழிவு நீர் கால்வாய் அருகே குழந்தைகள் விளையாடுவதும் போன்று தான் உள்ளது.
மேலும் சமுதாயக்கூடம் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயமும் உள்ளது. இந்த சமுதாயக்கூடத்தை உடனடியாகப் பராமரித்து உயிரிழப்பு ஏற்படும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இங்கு சுகாதாரமான குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக குன்னூர் நகராட்சிக்கு பலமுறை மனு அளித்தும் எந்த வகையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். உடனடியாக இப்பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்துதராவிட்டால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம் நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாணவி பிரியா உயிரிழந்த விவகாரம்: ஓரிரு நாட்களில் அறிக்கை..