நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்கார பகுதிகளில் நான்கு நாட்களாக காதில் ரத்தம் சொட்ட சொட்ட ஒற்றை யானை சுற்றி வந்தது. அதற்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது.
யானையின் உடலில் இருந்து பல லிட்டர் ரத்தம் வெளியேறியதாலேயே இறந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் முதுமலை வனப்பகுதியில் மூன்று கால்நடை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழு மற்றும் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானைக்கு உடற்கூராய்வு மேற்கொண்டனர். அதில், பெட்ரோல் அல்லது திரவகம் உள்ளிட்ட பொருள்களால் தாக்கியதில் யானை காயமடைந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில், கடந்த 40 ஆண்டுகளாக மக்களுடன் ஒன்றிணைந்து மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படுத்தாத இந்த யானை கிராம மக்களை பலரையும் கவர்ந்த ஒன்று. மேலும் பல சுற்றுலா பயணிகளுடன் பழகி வணிக ரீதியிலும் மக்களுக்கு உதவியது.
மக்களின் பாசத்துக்குரிய யானை இறந்ததால், ஊரில் ஒருவர் இறந்தால் எந்த மாதிரியான அஞ்சலி செலுத்தப்படுமோ அதேபோல் மசினகுடி பகுதி மக்கள் ஒன்றிணைந்து இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். அங்கு வைக்கப்பட்டிருந்த யானையின் புகைப்படம் அடங்கிய பேனருக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர். காட்டு யானை இறந்ததற்காக கிராமமே சோகத்தில் மூழ்கி அஞ்சலி செலுத்தியது வன ஆர்வலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.