இந்தியாவில் கரோனா நோய்க் கிருமித் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இதன் தாக்கம் அதிகமாகும். தற்போது நாடு முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடடிவக்கைகளை எடுத்துவருகின்றன. இதன் ஒரு கட்டமாக சுற்றுலா நகரமான நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடடிவடிக்கையாக மார்ச் மாதம் 17ஆம் தேதி அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதன்படி அன்றுமுதல் இன்றுவரை மாவட்டம் முழுவதும் அனைத்து சுற்றுலாத் தலங்களும் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
குறிப்பாக உதகையில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் காணப்படுவர். இப்போது நல்ல காலநிலை நிலவும் என்பதால் உள் மாநிலம், வெளி மாநிலம், வெளி நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வருவது வழக்கம்.
சுற்றுலாப் பயணிகள் வருகைதரும்போது முக்கியச் சுற்றுலாத் தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், முதுமலை, சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் சுற்றுலா வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களில் கூட்டிச் செல்வார்கள். இதற்காகச் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ஆல்டோ, இன்னோவா, இட்டியாஸ், சிப்ட் டிசையர், இண்டிகா போன்ற வாகனங்களுக்கு 1500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை வாடகை வசூல் செய்துவருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் கோவை, சென்னை, மைசூரு, பெங்களூரு விமான நிலையங்களில் பயணிகளை அழைத்துவந்து சுற்றுலாவை முடித்துவிட்டு மீண்டும் விமான நிலையத்தில் அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
இந்த ஏப்ரல், மே மாதங்களில் தொடர்ந்து வாகனம் ஒட்டினால் சுமார் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்று கூறுகின்றனர் ஓட்டுநர்கள். அடுத்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மழைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின்றி தவிக்கும் காலக்கட்டத்தை இந்தச் சம்பாத்தியத்தைக் சமாளித்து விடுவார்கள்.
ஆனால் தற்போது கரோனா நோய்க் கிருமித் தொற்று காரணமாக பிறப்பிக்கபட்ட ஊரடங்கினால் சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பி தங்களது வாழ்க்கையை நடத்திவந்த சுமார் 5000 சுற்றுலா வாகன ஓட்டிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர்.
சமவெளி மாவட்டங்களைப் போல இல்லாமல் மலை மாவட்டத்தில் வாகன செலவு அதிகம். மேலும் காப்பீடு, வரி, வங்கிக்கடன், வீட்டுச் சுமை இவைகளைச் சமாளிக்க முடியாமல் தவித்துவருவதாகவும், தங்களுக்கு அரசு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும்மெனவும் ஓட்டுநர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.