நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து, மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு, மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக, நீலகிரி மலை ரயில் பாதையில் மரங்கள் விழுந்தும், பாறைகள் விழுந்தும் ரயில் தண்டவாளம் பாதிப்பு அடைந்தது. இதனைத் தொடர்ந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து, ரயில் தண்டவாளங்களில் விழுந்த பாறைகள் மற்றும் மரங்களை அகற்றும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது.
இந்த நிலையில், கடந்த 22 நாட்களாக மேற்கொண்ட பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையில் மீண்டும் மலை ரயில் சேவை துவங்கப்பட்டது. இதன்படி, இன்று (டிச.14) காலை 7. 10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு 10.30-க்கு குன்னூர் ரயில் நிலையம் வந்தடைந்து. இதில் 150க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ரஞ்சனி கூறுகையில், “நீண்ட நாட்களாக மலை ரயில் பயணம் மேற்கொள்ள ஆர்வமுடன் இருந்தோம், இதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து இருந்தோம். இருப்பினும், கனமழை காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்ததது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இன்று (டிச.14) மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக இணையத்தில் அறிவிப்பு வெளியானது.
இதற்காக சென்னையில் இருந்து பயணம் செய்து இங்கு வந்தோம். மலை ரயிலில் பயணம் மேற்கொண்டது மகிழ்ச்சி. இந்த பயணத்தின்போது நீர்வீழ்ச்சிகள், மலைமுகடுகள், வனவிலங்குகள் உள்ளிட்டவற்றைக் கண்டு ரசித்தோம். மேலும் வளைந்து நெளிந்து சென்ற ரயில் பாதைகள் மற்றும் குகைகள் உள்ளே செல்லும் மலை ரயில், எங்களுக்கு புது அனுபவத்தை அளித்தது” என்றார்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு.. முதலமைச்சருடன் மத்திய குழு இன்று ஆலோசனை!