நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, தேயிலை பூங்கா ஆகியவை தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. பூங்காக்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வசதியாக பல வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 2018ஆம் ஆண்டு நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டு பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.20 என நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சுமார் 8 மாதங்களுக்குப் பின்பு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பூங்கா நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி பெரியவர்களுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு ரூ.30 என கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கரோன ஊரடங்கிற்கு பிறகு சுற்றுலாவிற்காக ஊட்டிக்கு வருகை தந்துள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பாக தெரிவிக்கும் சுற்றுலா பயணிகள், பூங்கா நுழைவு கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கூறுகையில், "ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பூங்காக்களில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பூங்கா பராமரிப்பு பணிகள், பணியாளர்கள் ஊதியம், மலர் விதைகள் உள்ளிட்ட பல தேவைகளுக்காக கட்டண உயர்வை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, கட்டணத்தை ரூ.10 உயர்த்தியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: குன்னூரில் கடும் குளிருடன் மேகமூட்டம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு