நீலகிரி மாவட்டத்தில், 60 விழுக்காடு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள், வரையாடுகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவற்றைக் கணக்கெடுக்கும் பணி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நீலகிரி வனக்கோட்டத்தில் உள்ள அவலாஞ்சி, பார்சன்ஸ் வேலி, குந்தா, குன்னூர், பைகாரா உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி நாளை தொடங்குகிறது.
இந்தப் பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்களுக்கு இன்று உதகையில் உள்ள கேர்னில் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் உதகை அரசு கலைக் கல்லூரி - வனவிலங்கு உயிரியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு நேரடி கணக்கெடுப்பு, மறைமுகக் கணக்கெடுப்பு, நீர் நிலைகளுக்குச் சென்று எவ்வாறு கணக்கெடுப்பது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சி முடிந்த பின்னர், ஒரு குழுவிற்கு ஒரு வனத்துறை ஊழியர், மூன்று தன்னார்வலர்கள் என 63 குழுக்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வனப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த கணக்கெடுப்புப் பணியானது 14ஆம் தேதி மாலை வரை நடைபெறும். இந்த ஆண்டு முதல் முறையாக காட்டெருமைகள், யானைகளை கணக்கெடுக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகப் பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் 18 ரேசன் அரிசி மூட்டைகள் கடத்த முயற்சி - ஒருவர் கைது